சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 41 நாட்கள் மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்தவுள்ளார். இதையடுத்து, 18 ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது. ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக ஏ.கே. சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக எம்.எஸ்.பரமேஸ்வர நம்பூதிரியும் பதவியேற்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27ம் தேதி நடை சாத்தப்படும். இதைத் தொடர்ந்து மகர ஜோதிக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15-ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்நிலையில் சபரிமலை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலையில் விளம்பரத்திற்காக சாமி தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காது என அம்மாநில தேவசம்பள்ளி அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அதனடிப்படையில் விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதே கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.