இந்திய நதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை யமுனை ஆற்றுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் ஆடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் நதிகளின் நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நதிகளின் நீரை யமுனை நதியில் திருப்பி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 2016 ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும் இது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.