தமிழகத்தில் 2,000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை : முதலமைச்சர் பழனிசாமி!

தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்காமல் இருந்திருந்தால், நோய்ப்பரவல் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் எனத் தெரிவித்தார். நாளொன்றுக்கு 85 ஆயிரம்வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், இந்த மினிகிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றுவார்கள் என்றார்.

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நோயின் தாக்கத்தை உணர்ந்து பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஒலிப்பெருக்கி மூலம் சுகாதாரப் பணியாளர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எவ்வளவு நிதிச்சுமை வந்தாலும் மக்களின் உயிரைக் காப்பதே அரசின் முக்கிய கடமை என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

 

Exit mobile version