சீனாவில் இருந்து நாடு திரும்புபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் மருத்துவ முகாம் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் சீனாவுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில், 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் சென்றுள்ளனர்.
உகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 325 இந்தியர்கள் இந்த விமானத்தில் அழைத்து வரப்படுகிறார்கள். விமானத்தில் அழைத்து வரப்படுவதற்கு முன்னதாக, அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இதனையடுத்து, இந்த விமானம் இன்று இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் கண்காணிக்க, இந்திய ராணுவம் அரியானா மாநிலம் மானேசரில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அங்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், படுக்கை வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையும் டெல்லி சாவ்லா நகரில் உள்ள முகாமில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாமை தயார் செய்துள்ளது.
இங்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் உணவு, தண்ணீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மேலும் ஒரு சிறப்பு விமானத்தை, இந்தியா இன்று சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.