தருமபுரி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
அரூர் அருகே, கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 10ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளி விடுதியில் தங்க வைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் பிரதாப், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதை உறுதி செய்தார். இதனையடுத்து, அப்பள்ளிக்கு சீல் வைத்த சார் ஆட்சியர், மாணவர்களின் பெற்றோர்களுக்கு முறையாக தகவல் அளித்து, அழைத்தும் செல்லும் படி தெரிவித்தார். இந்த நிலையில், மாணவர்களை பெற்றோர் வீட்டிற்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.