நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகம் மற்றும் உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கத்தின் ஆசிய தொகுப்பு இணைந்து நடத்தும் ஆசிய பசிபிக் நீர் வாழ் உயிரின வளர்ப்பு -2019 என்ற கருத்தரங்கத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளப் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் பெலிக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறுவது பெருமை அளிக்கிறது எனக் கூறினார். நீர் மேலாண்மைக்காக அரசு பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளது என்றும், குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். எனவே, எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.