சின்னத்திரையிலும், பெரியதிரையிலும் தனது திறமையால் சாதனை படைத்த “சுதா சந்திரன்”

நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நம்மால் நிச்சயம் முடியும் என்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, வாழ்வில் போராடி வெற்றிகண்டவர் நடிகை சுதா சந்திரன். 1965ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பையில் பிறந்தாலும் இவரது பெற்றோரின் பூர்வீகம் தமிழகம்தான். சுதா சந்திரனுக்கு 3வயது இருக்கும்போது, பரதத்தின் மீது ஆர்வம் கொண்டு, நடனக் கலையை வளர்த்துகொண்டார். தனது நடனத்தை பல்வேறு இடத்தில் அரங்கேற்றவும் செய்யத் தொடங்கினார். சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில், எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டது. 1981-ம் ஆண்டு, புனித யாத்திரை சென்றபோது, எதிர்பாராதவிதமாக திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தில், அவரது வலதுகாலை இழந்தார்.

ஆனாலும், அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. நடனத்தையும் விடவில்லை. ஜெய்ப்பூரில் செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு, தனது நடன நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்தார். முன்பைவிட, இன்னும் அதிக உத்வேகத்தோடு நடனம் ஆட ஆரம்பித்தார் சுதா சந்திரன்.

கால் இல்லாமல் எப்படி நடனம் ஆட முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலாய் இருந்தது, அவரது அதிரடி நடனம். இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் சுதா சந்திரன்.

நடனத்தின் மீது தீராக் காதல் கொண்டு, அதனை தீவிரமாகக் கற்று வந்த போதும், படிப்பையும் அவர் கைவிடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு, அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையிலேயே முடித்துக் கொண்டார்.

1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில், கதாநாயகியாகும் வாய்ப்பு சுதா சந்திரனுக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் 1986-ம் ஆண்டு நாச்செ மயூரி என்ற பெயரில், இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் சுதா சந்திரன் பெற்றார்.

அந்த விருது கொடுத்த உத்வேகத்தில், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி என பல மொழிப் படங்களில் அவர் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு, சுதா சந்திரனின் கவனம் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் தொலைகாட்சித் தொடரில் அவர் நடித்தார்.

நடிப்பு, நடனம், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர் என 30 வருடங்களுக்கும் மேலாக அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு பெரிய நடன நிகழ்ச்சிகளில் ஆடுவதை வழக்கமாக செய்து வருகிறார் சுதா சந்திரன். இவர், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு உந்து சக்தி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Exit mobile version