"ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட வேண்டும்"

வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யாத தி.மு.க. அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியங்களில் 35 காலி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதிமுக நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட்டு, சிதறாமல் வாக்குகளைபெற உழைக்க வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு கடந்த 4 மாத ஆட்சியில் எந்த மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு திமுக அரசு தொல்லை கொடுத்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றியதாக சரித்திரமே கிடையாது என குற்றம்சாட்டினார். நகைக்கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளதாக விமர்சித்தார்.

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில், ஏன் இன்னும் அவர் அமைச்சரவையில் நீடிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

 

Exit mobile version