மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை அமல்படுத்தப்படும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புக்கை சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வரும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளது. ஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்தார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒப்புகைச்சீட்டு முறை, 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் கருவியில் வெளியாகும் ஒப்புகை சீட்டில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடியும். ஆனால், இந்த சீட்டுகளை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் இவற்றை தேர்தல் ஆணையம் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உறுதியை ஏற்று, வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது. தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் இருந்த 3 ஆயிரத்து 173 புள்ளி 47 கோடி ரூபாய் நிதி, தேர்தல் ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதிலும் ஒப்புகைச்சீட்டு முறை அமலுக்கு வரவுள்ளது.

Exit mobile version