மின்னணு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் செயல் விளக்கம் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து அறியும் வகையில் ஒப்புகைசீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஒப்புகைச்சீட்டு இயந்திரம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் சென்னை செனாய் நகரில் உள்ள ஒரு பள்ளியில் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்வகையில், சென்னை மாநகரம் முழுவதும் 32 வாகனங்கள் தொகுதிவாரியாக சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளன. இந்த வாகனங்களையும், சத்தியபிரதா சாஹு மற்றும் கார்த்திகேயன் இருவதும் கூட்டாக துவக்கி வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு, மக்களவை தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் வாக்குப்பட்டியலில் தங்களது பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள், தற்போதும் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.