தோல்விகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு, சிறு வயதிலேயே வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய ஒரு பெண் ஜாக்லின்.
தனது 22வது வயதிலிருந்து போராடி, எந்த முன் அனுபவமும் இல்லாமல் வாழ்க்கையில் சாதனை படைத்தவர் ஆவார். அவரின் வெற்றிக்கு பின், பல தோல்வி அனுபவங்கள் மட்டுமே இருந்தன. 2007-ம் ஆண்டு ஜாக்லின் ‘சம் நோட்ஸ் ஆன் நாப்கின்ஸ்’( Some Notes On Napkins ) என்கிற தன் வலைப்பக்கத்தில், தனது கருத்தினை எழுதத் தொடங்கினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து முடித்து, மார்க்கெட்டிங் பற்றிய அனுபவங்களை பெற்றுக்கொண்ட ஜாக்லின், தொடர்ந்து வாழ்க்கையில் ஓடிகொண்டே இருந்தார்.
ஒரு தனியார் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த ஜாக்லின், சில காரணங்களால் வேலையை விட்டு நின்றார். இருப்பினும் மனம் தளராத ஜாக்லின், தொழில் செய்ய முனையும் பெண்கள், பணியாற்றும் பெண்கள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள ஆன்லைன் ஊடகம் அமைத்துத் தருவது என்று, பெண்களை மையப்படுத்தி பணியாற்ற, `கிரியேட் அண்டு கல்டிவேட்'( Create and Cultivate ) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு 28 வயதுதான். இன்று அமெரிக்காவின் மிக முக்கிய ‘கரியர் டெவலப்மென்ட் ( Career Developement ) நிறுவனமாக நிமிர்ந்து நிற்கிறது இவரது நிறுவனம்.
அவரது வளர்ச்சி குறித்து ஜாக்லின் கூறுகையில் “என்னால் தனித்து இயங்க முடியும், ஜெயித்துக் காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கையை பெறவே, நான் மிகவும் போராட வேண்டி இருந்தது”, “வேலைதான் என் வாழ்க்கை, கண்முன்னே நிறுவனம் சிறிது சிறிதாக வளர்ந்து வருவது பெரும் மகிழ்வைத் தருகிறது என்கிறார். வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு விட்டதே என்று உடைந்து போகாமல், தோல்விக்கு சவால் விட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.