பவாரியா கொள்ளையர்களை போல படு பயங்கரமாக செயல்படும் ஏடிஎம் நூதன கொள்ளையர்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் நூதன கொள்ளையர்களின் பின்னணி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைபர் குற்றங்களின் தலைநகராக திகழும் மேவாட் கிராமத்தின் அசர வைக்கும் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

 

ஸ்டேட் பேங்க் இந்தியா டெபாசிட் இயந்திரங்களை குறிவைத்து தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 21 புகார்கள் குவிந்துள்ளன.

சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளைபோன இந்த விவகாரத்தில் ஹரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ் மற்றும் அவரது கூட்டாளியான வீரேந்தர் கைது செய்யப்பட்டனர்.

ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது.

விமானத்தில் சென்னை வந்த இக்கும்பல் கூகுள் மேப் மூலம் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களை பட்டியல் எடுத்து, வாடகை இருசக்கர வாகனங்களில் சென்று கொள்ளை அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றவர்களையும் கைதுசெய்ய, துணை ஆணையர் ஹரிகிரண் தலைமையிலான தனிப்படை ஹரியானாவில் முகாமிட்டுள்ளது.

” டெபிட் கார்டு நம்பர் சொல்லுங்கோ சார்” என வங்கி மேலாளர் போல் பேசி மோசடி செய்வது, பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிப்பது என பலவிதமான நூதன முறைகளை கையாளும் இக்கூட்டத்தின் வாழ்விடமாக ஜார்கண்டின் ஜம்தாரா நகரமும், ஹரியானாவின் மேவாட் கிராமமும் உள்ளன.

பவாரியா கொள்ளையர்களை போல படு பயங்கரமாக செயல்படும் இக்கும்பல் இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவிலான சைபர் குற்றங்களிலும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

படித்த இளைஞர்களை வைத்து, துல்லியமாக கொள்ளையடிக்கும் இக்கும்பல், பயிற்சிக்காக சிறப்பு மையங்களையும் வைத்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கொள்ளையடித்து விட்டு மேவாட்டில் பதுங்கியிருந்த அமீர் ஹர்ஸ், செல்போன் சிக்னல் மூலம் பிடிபட்டார்.

இருப்பினும் எஞ்சியவர்களை பிடிக்க மேவாட் கிராமத்திற்குள் நுழைய முடியாத தனிப்படை போலீசார், ஃபரிதாபத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

ஒருமுறை கொள்ளையடிக்க டார்கெட் வைத்து அதனை அடைந்த பின், அந்த டெக்னிக்கை விட்டுவிட்டு, புதிய முறை குறித்து ஆலோசிக்கிறது இக்கும்பல்.

உள்ளூர் மக்களின் ஆதரவோடும், சில போலீசாரின் ரகசிய உறவோடும் கோடிகளில் கல்லா கட்டும் இக்கும்பலை பிடிப்பதே தமிழ்நாடு தனிப்படை போலீசாருக்கு சவாலாக இருக்கிறது.

இதையெல்லாம் மீறி மொத்த கும்பலும் பிடிபட்டாலும் பணம் மீட்கப்படுமா என்பது கேள்விக்குறிதான் என காவல்துறை வட்டாரங்களிலேயே குரல்கள் முனுமுனுக்க தொடங்கியுள்ளன.

Exit mobile version