திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 44 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கலுக்கு நேற்று வரை அவகாசம் வழங்கபட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட 63 பேர் மனு செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் சரவணனின் வேட்பு மனு மீது சுயேச்சை வேட்பாளர்கள் குளறுபடி உள்ளதாக தெரிவித்தனர். அவரது மனுவை ஏற்க கூடாது என அவர்கள் முறையிட்டனர். தொடர்ந்து அரை மணி நேரம் கூச்சல் குழப்பத்திற்குப் திமுக வேட்பாளரின் வேட்பு மனு ஒத்திவைக்கப்பட்டு மற்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம்,அதிமுக, திமுக உள்ளிட்ட 44 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.