சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா, கொரோனா பரிசோதனைக்கு வர முடியாது என்றும், மருத்துவமனையில் தனக்கு தனி அறை வேண்டும் என்றும் அலப்பறை செய்ய ஆரம்பித்தார். அவரை சமாதானப்படுத்திய காவல்துறையினர், அவர் வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். திருப்பூர், அய்யம்பாளையம், நாலு ரோடு சபரிநகரைச் சேர்ந்தவர் சூர்யா…. டிக்டாக் செயலி மூலம் பரவலாகப் புகழ்பெற்ற இவரை, டிக்டாக் ரசிகர்கள் ரௌடி பேபி சூர்யா செல்லப்பெயர் வைத்து அழைக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற ரவுடி பேரி சூர்யா, கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிங்கப்பூரிலேயே மாட்டிக்கொண்டார்.
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பு விமான சேவைகள் தொடங்கியதால், கடந்த ஞாயிறன்று ரவுடி பேபி சூரியா, விமானம் மூலம் கோவை வந்தார். அங்குள்ள விடுதி ஒன்றில் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர், திடீரென திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு கிளம்பிவிட்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கொரோனா அச்சத்தால், சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ரௌடி பேபி சூர்யா குறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரவுடி பேரி சூர்யாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த காவல்துறையினரிடம், தான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன் என்றும், தமிழகத்தில் அடிக்கும் வெயிலால், பொதுமக்களிடமிருந்து தனக்கு கொரோனா பரவி விடுமோ என்று பயமாக உள்ளது என்று கூறியுள்ளார். அதனால் அரசு மருத்துவமனையில் தனக்குத் தனி அறையும், சிறப்பான உணவும் வேண்டும் என்றும், இல்லை என்றால் நான் பிரச்சினை செய்துவிடுவேன் என்றும் அலப்பறை செய்யத் தொடங்கி உள்ளார். அவரை பொறுமையாகப் பேசி சமாதானப்படுத்திய காவல்துறையினர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான நேரம் முடிந்ததால், ரயில் நிலையத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை முடிந்ததும், மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து போலீஸார், அங்கேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தினர்.
சமூகவலைத்தளங்கள் மூலம் கிடைக்கும் பிரபலம் என்பது பிறருக்கு நன்மை செய்வதற்குப் பயன்படவில்லை என்றாலும், பிறருக்குத் தொந்தரவு கொடுக்க அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதை ரவுடி சூர்யா பேபி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பு…