அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று செய்தி தொகுப்பு…
அமெரிக்காவின் அரசியல் நிகழ்வுகள் தற்போது புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 24ம் தேதி டொனல்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கபட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி.அதிபர் ட்ரம்ப், தனது அரசியல் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி உக்ரைன் நாட்டின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்தாகவும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென் மீது பொய்யான புகார்களை கொடுக்கும் படி அழுத்தம் கொடுக்கபட்டதாக கூறப்பட்டது . இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணை ஆணையம், `ட்ரம்ப் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்’ என்பதை உறுதி செய்தது.
இந்த நிலையில் `ட்ரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்” எனத் தெரிவிக்கபட்டது. நாடாளுமன்ற அவைக்குழுத் தலைவர்கள் அனைவரையும் ட்ரம்ப்க்கு எதிரான தங்கள் தீர்மானங்களை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பெலோசி கேட்டுகொண்டார். டிசம்பர் 20ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசி வேலை நாள்; அதற்குள் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நம்பப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் இரண்டு அவைகள் செயல்படுகின்றன. கீழவையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட் என அழைக்கப்படும் மேலவையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். முதலில் இந்தத் தீர்மானங்கள் கீழவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், இந்தத் தீர்மானம் மேலவையில் விவாதிக்கப்படும். இந்த விவாதம் அமெரிக்காவின் தலைமை நீதிபதியின் முன்னிலையில் நடைபெறும். இதில் மூன்றில் இரண்டு என்ற கணக்கில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ட்ரம்ப் பதிவியிலிருந்து நீக்கப்படுவார். ஆனால், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடாமல் தடுக்க வேன்டுமென்றால் மற்றொரு தீர்மானத்தின் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும்.
தற்போது கீழவையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 197 பேர் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், இந்தத் தீர்மானம் கீழவையில் பெருவாரியான ஆதரவைப்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால், மேலவையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 43 பேர் மட்டும் உள்ள நிலையில், குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர்.
இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தாலும் தீர்மானத்தை நிறைவேற்றுவது கடினமாகும், ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்த 5 மேலவை உறுப்பினர்கள் அதாவது சொந்தக் கட்சி உறுப்பினர்களே எதிராக வாக்களித்தால் மட்டுமே ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க முடியும். அமெரிக்க வரலாற்றில் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கொண்டவர்கள் இரண்டு அதிபர்கள். ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் பில் கிளின்டன். இவர்கள் இருவருக்கும் மேலவையில் ஆதரவு இருந்ததால், தீர்மானத்தைத் தோற்கடித்து பதவியில் நீடித்தனர். ட்ரம்பிற்கு ஆதரவு கிடைக்குமா? பதவியில் தொடர்வாரா? என்பதை வரும் நாட்கள் தான் முடிவு செய்யும்…