கோடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னை உட்பட வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனல்காற்று கடுமையாக வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து அதிக நாட்கள் மழை பெய்யாத இடமாக சென்னை மாநகரம் மோசமான சாதனையை படைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் சென்னையில் மழை பெய்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக இதுவரை கிட்டத்தட்ட 193 நாட்களை தாண்டி மழை பெய்யவில்லை.
ஏற்கனவே 2015ம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் மழை பெய்யாமல் இருந்த நகரமாக சென்னை சாதனை படைத்தது. தற்போது அந்த சாதனையை மீண்டும் சென்னையே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.