ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவகம், 525 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி அப்துல் கலாமின் தேசிய நினைவிடம் மூடப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ராமேஸ்வரம் அக்னிக் தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கலாம் நினைவிடத்தை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வந்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையால் 525 நாட்களுக்கு பின் இன்று காலை 9 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது.