ஆவின் பால் தடை இல்லாமல் கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது!!!

ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்திகள் பரவிய நிலையில், ஆவின் பால் தடை இல்லாமல் கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை என்றும், பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து இடங்களிலும் நுழைவாயிலில், சோதனை செய்யப்பட்ட பிறகே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாதவரம் பால் பண்ணை நுழைவாயில் சோதனையின்போது, பால் பண்ணைக்கு வெளியே லாரிகளில் பால் டப்பை ஏற்றும் கடைநிலை பணியாளர் ஒருவருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கி வரும் பால் மற்றும் பால் பொருள்கள் அனைத்தும் பல்வேறு கட்ட தரபரிசோதனைகளுக்கு பின்னரே வெளிவருகிறது என்றும், தூய்மையான பால், ((Pasteurisation)) பாஸ்டியூரிசேஷன் செய்யப்பட்ட பிறகுதான், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version