ஆதார் அட்டை மூலம் வழங்கப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க, ‘சர்வ தரிசனம் டிக்கெட்’ என்ற பெயரில் ஆதார் அட்டை மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தேவஸ்தானம் தொடங்கியது.
முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தினமும் வழங்கும் திட்டம் தொடங்கியது. இந்த டிக்கெட்கள் திருப்பதி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி வணிக வளாகம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. திருமலையில் 8 வரிசைகள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த டிக்கெட்டுக்கு பக்தர்களிடம் இருந்து படிப்படியாக ஆதரவு குறைவதாக கூறி டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் குறைத்தது. இருப்பினும், இந்த டிக்கெட்களை பெற மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக்கூறி, திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது இன்று முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.