அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண்ணை உருவாக்கி, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆதார் எண் இருக்கக்கூடிய மாணவர்களிடம் இருந்து, அவர்களின் ஆதார் எண் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து, கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்து ரசீதை மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் பதிவை மேற்கொள்ள வசதியாக மாவட்ட அளவில் ஆதார் பதிவுக் கண்காணிப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.