கோவையில் தனது நிலத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்காக ஒதுக்கியுள்ள விவசாயி, சிறுதானிய உணவுகளை பயிரிட்டு வருகிறார். வரப்பு சண்டையில் அண்ணன் தம்பியே ஒருவரையொருவர் கொலை செய்யத் துணியும் தற்கால சமுதாயத்தில், விவசாயின் செயல் மற்றவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. நிகழ்காலத்தில் பணம் சம்பாதிப்பதே மக்களுக்கு பிரதான சிந்தனையாக மாறியுள்ளது. காலியாக கால் கிரவுண்ட் நிலம் இருந்தாலும் அதை வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதே தற்கால தலைமுறையினரின் சிந்தனையாக உள்ளது. இதனால் பொதுநலன் குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அருகி வருகிறது. அவ்வாறு அருகி வருபவர்களில் ஒருவர் தான் கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துமுருகன். தனது சொந்த நிலத்தில் அரை ஏக்கரை பறவைகளுக்காக ஒதுக்கிய அவர் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை பயிரிட்டுள்ளார். தான் பயிரிட்ட சிறு தானியங்கள் அனைத்தையும் பறவைகள் உண்டு தீர்த்து விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் முத்துமுருகன்
ஊரடங்கு காலத்தில் மனிதர்களுக்கு சக மனிதர்களும் அரசும் உதவிய போது, பறவைக்கு யார் உணவிடுவார்கள் என எழுந்த கேள்வியின் காரணமாக சிறுதானியங்களை பயிரிட்டதாக தெரிவிக்கிறார். முன்பு கம்பு, கேப்பை உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு வந்த நிலங்களில், தற்போது பணப்பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகிறது. அதாவது பெரும்பாலான விவசாயிகள், நெல், கரும்பு உள்ளிட்டவற்றை மட்டுமே பயிரிடுகின்றனர். இதனால் உணவு கிடைக்காமல் பறவைகள் மடிவது அதிகரித்துள்ளது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களில் உள்ளவர்களும் பறவைகளுக்கு உணவிடலாம் என்று தெரிவிக்கும் அவர், இதன்மூலம் உணவிடும் நபரின் மன அழுத்தம் குறையும் எனவும் குறிப்பிடுகிறார். இந்த பூமியானது நமக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என குறிப்பிடும் முருகன், உணவு உற்பத்தியில் ஏற்படுத்தும் மாற்றம் அவற்றையும் பாதிப்பதாக கவலை தெரிவித்தார்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்களின் வாழ்வியல் மாறுதல்கள், நம்மை சார்ந்து வாழ்ந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. நம்மை சார்ந்து வாழும் உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய மிகப்பெரும் கடமை மனிதர்களாகிய நமக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மிகப்பெரிய முதலீடோ, நேரமோ தேவையில்லை, மனம் இருந்தால் மட்டும் போதும் என்பதே முத்துமுருகன் உணர்த்தும் செய்தியாக உள்ளது.