குவைத் நாட்டில் கொத்தடிமையாய் இருந்து உயிர்தப்பிய பெண்ணை தமிழக அரசு மீட்டு, சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. கடந்த மே மாதம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி, திருச்சியைச் சேர்ந்த 2 பெண் ஏஜெண்டுகளிடம் பணம் கட்டி, வீட்டு வேலைக்காக குவைத் நாட்டிற்குச் சென்றார். அங்கு சுமதியிடம் 20 மணிநேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு சம்பளமும் கொடுக்காமல், உணவு கொடுக்காமல் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இருட்டு அறையில் தாக்குதலுக்குள்ளானதாகவும் அறியப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க எண்ணிய சுமதி வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து கால், இடுப்பு எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமதி குறித்து அங்குள்ள தமிழர்கள் மூலமாக, சென்னையில் உள்ள வீட்டுவேலை தொழிலாளர் அமைப்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின், இத்தகவல் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரியபடுத்தப்பட்டு, குவைத் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சுமதி தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சென்னை திரும்பினார்.