மயிலாடுதுறையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பெண்மணி, மருத்துவ செலவுகளுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் வசித்து வரும் முத்து என்பவர், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா, அம்மா மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால், மீனா பாதிக்கப்பட்டார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருடைய, இடதுகண்ணை முற்றிலுமாக அகற்றிய மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்படாமல் இருக்க வாயின் ஒரு பகுதியையும் அகற்றியுள்ளனர். மருத்துவ செலவுகளுக்காக தனது உடமைகளை விற்று, இதுவரை 15 லட்ச ரூபாய் வரையில் முத்து செலவு செய்துள்ளார். மேற்கொண்டு செலவு செய்ய முடியாமல் தடுமாறி வரும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர், மீனாவின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.