அரசின் நீர்த்தேக்க தொட்டியை கொண்டு குடிநீர் சேமிப்பில் முன் உதாரணமாகத் திகழ்கிறது ஒரு கிராமம். அதை பற்றிய ஒரு செய்தி குறிப்பை தற்போது பார்க்கலாம்..
இந்த ஆண்டு, தமிழகத்தில் பருவமழை சரிவர பொழியாத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தியாகவல்லி பகுதியில் தமிழக அரசு அமைத்து கொடுத்துள்ள இரண்டு நீர் தேக்க தொட்டிகளை முறையாக பராமரித்து அதன் மூலமாக, அப்பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழித்து வருகின்றனர். இந்த நீர்தேக்க தொட்டிகள் மூலம் திருச்சோபுரம், தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ”தண்ணீர் தானே” என்று அலட்சியமாக செயல்பட்டு குடிநீரை வீணாக்கும் நபர்களுக்கு கிராம நிர்வாகம் அபராதம் விதிப்பது தான். 200 ரூபாயை அபராதமாக வசூலித்து, அந்த பணத்தை குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு செலவிட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்ல, குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரையும், வீணடிக்காமல், குளத்தில் விட்டு மீன் வளர்த்து வருகின்றனர். குளங்களைச் சுற்றி தென்னங்கன்றுகள் வைத்தும் பராமரித்து வருகின்றனர். தண்ணீர் சிக்கனம் இல்லாத காரணத்தால், சில கிராமங்கள் சிரமப்படும் நிலையில், குடி நீரை சிக்கனமாக செலவிட்டு அனைத்து கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக திகழுகின்றது தியாகவல்லி கிராமம்.
ஆறுநாட்களுக்கு தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் தங்களால் அரசு கட்டிக் கொடுத்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் தண்ணீரை பெற்று சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர், மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தியாகவல்லி கிராம மக்கள்.