61 பேரை பலி கொண்ட விபத்தில், ரயில் ஓட்டுனர்,ரயிலை நிறுத்த முயற்சி செய்ததாகவும், நீண்ட நேரம் ஹாரன் அடித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜோதா பதக் என்னும் இடத்தில் நடத்த ரயில் விபத்தில் 61 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு சார்பில் 5 லட்சமும் மத்திய அரசு சார்பில் 2 லட்சமும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து நீதி விசாரனை நடத்த மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தார், நிதியுதவியை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்துக்கு காரணமான ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் அளித்துள்ள விளக்கத்தில், ரயில் தண்டவாள பகுதியில் ஏராளமானோர் நிற்பதைப் பார்த்ததும் அவசரமாக பிரேக்கை இயக்கியதாகவும் வேகமாக ஹாரன் ஒலி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்தவுடன் ரயிலை நிறுத்த முயற்சித்ததாகவும்,ஆனால் சிலர் ரயில் மீது கல்வீசி தாக்கத் தொடங்கியதால் ரயிலை தொடர்ந்து இயக்க நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.