இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தக்கான்குளம் கிராமத்தில், பாரம்பரிய உணவு மற்றும் அரிசி ரகங்களை நினைவூட்டும் வகையில், உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பாரம்பரிய அரிசி வகைகளான மாப்பிளை சம்பா, ஆற்காடு கிச்சடி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு செடி வகைகள், மாடு இனங்கள் மற்றும் விவசாய சாதனங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, இயற்கை உரங்கள் பற்றியும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த உணவுத்திருவிழாவை கண்டு களித்ததுடன், விற்பனைக்காக காட்சிப்படுத்திய விளைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றனர்.