முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
முதுநிலை பொறியியல் படிப்புக்களான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 27ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலந்தாய்வில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற மாணவர்களுக்கு 28ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 5 ஆயிரத்து 83 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, 3 ஆயிரத்து129 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். ஆயிரத்து 750 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை என்றும், 204 பேர் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை என்றும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.