விவசாயம், ராணுவம், ஊனமுற்றவர்களுக்கான கருவிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ள இளைஞர்

600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ள தஞ்சை மாணவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காண்போம்.

தஞ்சை மாவட்டம் மருத்துவக் கல்லூரி ரகுமான் தெருவில் வசித்து வருபவர் அமிர்த கணேஷ். மின்னணுவியல் தகவல் தொடர்பில் பொறியியல் படித்து முடித்த இவர், கடந்த 12 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்துள்ளார். விவசாயம், ராணுவம், ஊனமுற்றவர்கள் மற்றும் மருத்துவத்திற்கு தேவையான அறிய கண்டுபிடிப்புகள், மின் அளவு குறியீட்டாளர்கள் வீடு வீடாக சென்று மின் அளவீட்டை குறிப்பதற்கு பதிலாக, ஒரு பகுதியிலேயே நின்று, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் மின் அளவை துல்லியமாக அளவிடும் கருவி என பல அறிய கண்டுபிடிப்புகளை அமிர்த கணேஷ் கண்டுபிடித்துள்ளார்.

முக்கியமாக, விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை தமிழகத்தில் மட்டும் 144 பேர் விஷவாயு தாக்கி இறந்து உள்ளனர். பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் விஷவாயுக்கள் இருக்கும். அப்படி இருக்கும் தொட்டிகளில் விஷவாயுக்கள் உள்ளதா என்பதை மேலிருந்தே தெரிந்து கொள்ள ஒரு கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவி ஒரு குழாயில் இணைக்கப்பட்டு இருக்கும். அதை தொட்டியினுள் விடும் போது அதில் இருக்கும் வாயுக்களில் விஷத் தன்மை இருந்தால் அந்த கருவி உடனடியாக அதிர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும். அதன் பிறகு சக்கர் எனப்படும் கருவி மூலமாக அந்த விஷவாயுவை வெளியேற்றிவிடும்.

சில நேரங்களில் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போதே, திடீரென விஷவாயுக்கள் வெளியேறி உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இதை தவிர்க்க விஷவாயுவை கண்டறியும் கருவியுடன் கூடிய ஒரு ஹெல்மெட்டை கண்டறிந்துள்ளார். அந்த ஹெல்மெட்டில் விஷவாயுவை கண்டறியும் கருவி, பிராணவாயுவை கொடுக்கும் கருவி மற்றும் ஒலியை ஏற்படுத்தி தொட்டிக்குள் இறங்கியவரை எச்சரிக்கும் கருவி உள்ளிட்டவை இருக்கும். இதே போல் மேலே இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிகப்பு விளக்கு மற்றும் ஒலியுடன் கூடிய ஒரு கருவியும் இருக்கும். இதன்மூலம் உள்ளே இருப்பவர் மட்டுமல்லாது வெளியே இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையை ஏற்படுத்துவதால், விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் தடுக்க முடியும்.

இது மட்டுமல்லாது இது போன்று பல எண்ணற்ற பொருட்களையும் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள இளம் விஞ்ஞானி, அமிர்த கணேஷின் கண்டுபிடிப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய முறையில் ஊக்கமும் செயல்வடிவமும் அளித்தால், புதிய இந்தியா என்ற அனைவரின் கனவும் கூடிய விரைவில் நனவாகும்.

Exit mobile version