படிப்புக்காக சேர்த்து வைத்த பணத்தை ஏழை மக்களுக்காக வழங்கிய மாணவி!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனது படிப்புக்காக சேமித்த பணத்தை கொடுத்து உதவிய மதுரையை சேர்ந்த மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை, அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மதுரையை சேர்ந்த முடித்திருத்தும் தொழில் செய்து வரும் மோகன் என்பவரின் மகள் நேத்ரா. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது எதிர்கால படிப்பிற்காக சேமித்த பணத்தை நேத்ரா கொடுத்து உதவி செய்தார்.  இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி நேத்ராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை மக்களுக்காக கொடுத்து உதவிய மாணவிக்கும், அவரது தந்தைக்கும், தமிழ்நாட்டு மக்கள் சார்பில், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை, தமிழக அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இது போன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் தான் மனதார வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Exit mobile version