ஆட்டிசத்தை வென்று சாதனை படைத்த ஸ்வப்னா-நெகிழ்ச்சியான தருணம்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்கு உள்ள தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனைகளை படைப்பார்கள். தனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டபோதும் அதையெல்லாம் தாண்டி தன் லட்சியத்தை அடைய தன் உழைப்பை கொடுத்து வருகிறார் ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஸ்வப்னா.

அவரிடம் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணையக்குழு சிறப்பு பேட்டி எடுக்கையில் நம்முடைய கேள்விகளுக்கு அத்தனை நம்பிக்கையாக பதில் அளித்தார் ஸ்வப்னாவின் தாயார்.

ஸ்வப்னா மஸ்கட்டில் பிறந்து வளர்ந்தவர், பிறந்த உடனே அவருக்கு எந்த குறையும் இல்லை. வழக்கமாக இருக்கும் குழந்தைகளை போல தான் ஓடி ஆடி விளையாடி வந்துள்ளார். ஆனால் 2 வயது தொடங்கியதும் வழக்கமான செயல்பாடுகளில் மாறுபடுகள் தெரிந்ததால் மருத்துவர்களிடம் காண்பித்திருக்கின்றனர் பெற்றோர்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். தன் மகள் ஸ்வப்னா ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டதை அறிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் தங்கள் குழந்தைக்கு அரணாகவும், அரவணைப்பாகவும் மாறி இருக்கிறார்கள் ஸ்வப்னாவின் பெற்றோரான சௌந்தரராஜன், கற்பகவள்ளி.

தற்காலத்தில் தான் ஆட்டிச குறைபாடு பற்றி சமூகத்தில் சற்று விழப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு இது போல விழிப்புணர்வு இல்லாததால் சமூகத்தில் பல உளவியல் சிக்கல்களை சந்தித்து மீண்டிருக்கிறார்கள் .ஸ்வப்னா ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவருடைய எண்ணங்களுக்கோ சாதனைகளுக்கோ லட்சியங்களுக்கோ என்றுமே அவர்கள் தடைபோட்டதில்லை. சிறுவயதிலேயே பாட்டும் வீணையும் நடனமும் ஸ்வப்னாவை ஈர்த்திருக்கிறது. 8 வயதில் நடனம், பாட்டு வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார் ஸ்வப்னா. அதில் ஆர்வம் ஏற்படவே வீணை வாசிப்பதிலும் ஆர்வம் செலுத்தி இருக்கிறார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாட்டு போட்டியில் பங்குபெற்ற லட்சக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் முதல் 40 போட்டியாளர்களுக்குள் வந்து தன் பாட்டு திறமையை நிரூபித்துள்ளார் ஸ்வப்னா. தற்போது அந்த நிகழ்ச்சியின் செல்ல பிள்ளையாக மாறியுள்ள ஸ்வப்னா, இப்போது பலரின் மனங்களிலும் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறார்.

 

ஸ்வப்னாவின் ஆசையே மிகப்பெரிய பாடகியாக வரவேண்டும் என்பது தான். அதற்காக தன்னை இப்போது இருந்தே தயார் படுத்திகொண்டிருக்கிறார். சின்னக்குயில் சித்ராவை தன் ஆதர்ச நாயகியாக மனதில் கொண்டிருக்கும் ஸ்வப்னா , அவரை போலவே வர வேண்டும் என்று தன் அம்மாவிடம் அடிக்கடி சொல்லி கொண்டிருக்கிறார். குழந்தையின் நியாயமான ஆசையை நிறைவேற்றாத பெற்றோர் இந்த உலகில் உண்டா? ஸ்வப்னாவின் ஆசையை நிறைவேற்ற அவரின் பெற்றோர் கூடுதலாக முயற்சிகளை செய்து பெற்றோருக்குரிய இலக்கணமாக திகழ்ந்து வருகிறார்கள்.தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்வப்னா, தொடர்ந்து ஆன்லைன் மூலம் இசை வகுப்புகளில் சேர்ந்து பயில ஆரம்பித்து இருக்கிறார்.

மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் ஸ்வப்னா.

Exit mobile version