கஜா புயலால் பல்வேறு மரங்கள், பயிர்கள் அழிந்திருந்தாலும், பனை மரங்கள் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் நிற்கின்றன. உறுதியான பனைமரத்தின் சிறப்புகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
பனைமரங்களின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா நாடாக இருந்தாலும், சங்க காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்விலோடு நெருங்கிய மரமாக பனை மரங்கள் திகழ்கின்றன. பனை ஓலை, பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கருப்பட்டி என பனை மரத்தின் எல்லா பகுதிகளும் ஒவ்வொரு வடிவில் பயன் தரக்கூடியதாகவே உள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள, தென்னை, வாழை என எண்ணற்ற மரங்கள் சேதமடைந்தன. மிகப்பழமையான பெரிய மரங்களும் வேறோடு வீழ்ந்திருக்கின்றன. ஆனால் பல ஊர்களை சூறையாடிய கஜா புயலால், பனை மரங்களை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பனை மரத்தின் ஆணிவேரை கடும் புயலால் அசைக்கக் கூட முடியவில்லை. புயலைத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது தமிழர்களின் பாரம்பரிய அடையாள சின்னமான பனைமரம்.
புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் பார்வை, தற்போது பனை மரத்தின் பக்கம் தான் உள்ளது. அத்தனை வாழ்வாதாரங்களும் அழிந்தாலும் பனை மரம் மட்டும் அழியாமல் நிற்கிறது. தென்னை, மாமரம், நெல் பயிர்களை நம்பியிருந்த மக்கள் இனிமேல் பனை மரத்தின் பலன்களை தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
நூறு ஆண்டுகளைக் கடந்து நிமிர்ந்து நிற்கும் பனை மரங்கள், இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கிறது. முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பனைமரத்தின் நன்மைகள் குறித்து, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு நாம் எடுத்துச் சொல்லுவோம்.