6 வயதேயான உலகத்தின் மிக இளமையான தீவு ஒன்று இப்போது மீண்டும் கடலால் விழுங்கப்பட்டு மறைந்துள்ளது. உலகம் இதுவரை கண்ட நிலநடுக்கத் தீவுகளில், மிகப்பெரியதான இந்தத் தீவுக்கு என்ன நடந்தது? – பார்ப்போம் இந்த தொகுப்பில்…
கடந்த 2013ஆம் ஆண்டின் செப்டம்பர் 24ஆம் தேதியில், பாகிஸ்தானின் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில், 7.7 ரிக்டர் அளவுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. 800 பேரின் உயிரையும், 21 ஆயிரம் வீடுகளையும் இந்த நிலநடுக்கம் பலி கொண்டது.
இந்த நில நடுக்கத்தின் போது, பாகிஸ்தானின் குவடார் விரிகுடாவில், கடலின் நடுவே ஒரு புதிய தீவு தோன்றியது. கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்த இந்தத் தீவின் நீளம் 150 மீட்டர்களாகவும், அகலம் 180 மீட்டர்களாகவும் இருந்தது.
கடல் நடுவே எரிமலைகள் வெடிக்கும் போது தீவுகள் உருவாவதுண்டு. ஆனால் நிலநடுக்கத்தால் தீவுகள் உருவாவது அரிதானது. புவியின் உள்ளே உள்ள தட்டுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்ளும் போது, அவற்றின் இடையே சிக்கும் மண்ணானது வெளிவர முயற்சிக்கும். அந்த முயற்சியின் போது தரை பிளந்து மண் வெளியேறுவதால்தான் நிலநடுக்கத் தீவுகள் உருவாகின்றன.
நிலநடுக்கத்தால் வெளியேறும் மண்ணின் அளவு பொதுவாக ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டருக்கும் மேலே குவிவது இல்லை. ஆனால் அரபிக் கடலின் கீழே உள்ள தரையில், யுரேஷியன் மற்றும் அரேபியன் புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால்
உருவான இந்தத் தீவு, வழக்கத்தைவிட 10 மடங்கு அதிக மண்ணால் உருவாகி இருந்தது. உலகம் கண்ட நிலநடுக்கத் தீவுகளில் எல்லாம் இதுவே மிகப் பெரியதாக இருந்தது.
பாகிஸ்தான் அரசு இதற்கு சல்சலா கோஹ் – என்று பெயரிட்டது, உருது மொழியில் இதற்கு ‘நிலநடுக்கத் தீவு’ – என்பது அர்த்தம். 2013ல் இந்தத் தீவு செயற்கைக் கோள் படங்களில் தெரியும் அளவுக்கு தெளிவாக இருந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில், இதன் பரப்பு குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 2017ல் இது
கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. இப்போது இந்தத் தீவு இருந்த இடத்தையே நம்மால் காண முடியவில்லை.
அரபிக் கடலில் ஏற்படும் தொடர் அலைகளால், தீவில் உள்ள மண் கரைக்கப்படுவதாலேயே, இந்தத் தீவு காணாமல் போனதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவியில் பொதுவாக ஒரு தீவு உருவாகவோ, மறையவோ, பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என்ற நிலையில், ஒரே நாளில் தோன்றி, ஆறே ஆண்டில் மறைந்த இந்தத் தீவு, உண்மையில் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான்.