ராமநாதபுரத்தில் எலும்புறுக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அருணா கடந்த 5 ஆண்டுகளாக எலும்புறுக்கி நோயால் அவதியடைந்து வந்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள அருணாவின் கால்களும் கைகளும் செயலிழந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவை சந்தித்த பெற்றோர், போதிய வசதி இல்லாததால், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறியுள்ளனர். இதனால், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மாணவிக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற கோரி மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை தொடர்ந்து தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மாணவியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.