பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் பலூன் விண்ணில் ஏவப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பள்ளி மாணவர்கள் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டும் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பின் சார்பில், பலூன் செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுசேரியில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் உருவாக்கிய செயற்கைகோள்கள் இஸ்ரோ விஞ்ஞானி உமா மகேஸ்வரன் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏவப்பட்டது. பொருத்தப்பட்டுள்ள சென்சார் சாதனங்கள் மூலமாக வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், காற்றழுத்தம் உள்ளிட்ட வானிலை தொடர்பான தகவல்களை அனுப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரவாரத்துடன் ஏவப்பட்ட பாலூன் செயற்கை கோளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

Exit mobile version