செந்தமிழ்க் காப்பியங்களின் கரைகண்ட தமிழ்க்கடல் அ.ச.ஞானசம்பந்தத்தின் 19-வது நினைவு நாள் இன்று…
அ.ச.ஞா என்று அழைக்கப்பட்ட அவரின் அரும்பணிகள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
இளம் வயதிலிருந்தே இன்பத்தமிழ் முழக்கத்தை மேடையில் தொடங்கிய இளஞ்சூரியன் ஞானசம்பந்தம்,
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த தீந்தமிழ் ஊற்று. காவிரி ஆற்றின் செழுமையும், சோழவள நாட்டின் வளமையும் திகழும் சிந்தனைகளுக்கு இவர் சொந்தக்காரர் ஆவார்.
சைவத்தையும், தமிழையும் கண்களாகப் போற்றிய தமிழ் மரபில் பிறந்த ஞானசம்பந்தம், தமது தந்தையின் தமிழ் ஆற்றலால் ஆர்வம் பெற்றவர் ஆனார்.
தமது ஆரம்ப கல்வியை லால்குடியில் தொடங்கி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த ஞானசம்பந்தம், தமது ஆர்வக் கனலுக்கு ஆகுதிகள் இட்ட, நாவலர் சோமசுந்தர பாரதியாரைச் சந்தித்தார்.
சோமசுந்தர பாரதியாரின் சீடராக வளர்ந்த அ.ச.ஞானசம்பந்தம், திரு.வி.க, தெ.பொ.மீ, வ.ச.சீனிவாச சாஸ்திரி உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் நண்பராக மலர்ந்து, சமகால எழுத்தாளுமையாக உயர்ந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராக பல மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அனைவராலும் அன்புடன் அ.ச.ஞா என்று அழைக்கப்பட்டார்.
கம்பராமாயணம், சிலப்பதிகாரம், வில்லிபாரதம் உள்ளிட்ட காப்பியங்களில் ஆழங்கால் பட்ட அறிவுடைய அ.ச.ஞ, ‘ராவணன் – மாட்சியும் வீழ்ச்சியும்’ என்ற தமது முதல் புத்தகத்தை 1945-ம் ஆண்டு வெளியிட்டார்.
ராமனை மட்டுமே புகழ்ந்து பேசிய அக்கால இலக்கிய உலகில், அசஞ தான், கம்பன் காட்டிய ராவண மாட்சியின், குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்சிப்படுத்தினார்.
அடுத்தடுத்து வெளியான இவரது ‘கம்பன் கலை’, ‘தம்பியர் இருவர்’ போன்ற நூல்கள், கம்பராமாயண ஆய்வுகளுக்குச் சிறந்த கலைக்களஞ்சியங்களாக விளங்குகின்றன.
சென்னை வானொலி நிலையத்தில், நாடகங்களைத் தயாரிக்கும் பணியில் அமர்ந்த அ.ச.ஞா, தமது இயற்றமிழ் ஞானத்தை, இசைத்தமிழில் இழைத்து பல நாடகங்களை உருவாக்கினார்.
தாம் படித்துச் சுவைத்த காப்பியங்களை, பல நயங்கள் ததும்பும் நாடகங்களாக காட்சிப்படுத்தினார். தமிழ் மேடைப் பேச்சுக்கு புதுவித இலக்கணம் படைத்த அசஞ மேடைப் பேச்சின்பால், பல இளைஞர்களைக் கவர்ந்தவர் ஆவார்.
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர் என பல மணிகளைத் தம் தமிழ் மணிமுடியில் புனைந்திருந்த அ.ச.ஞவை, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சாகித்ய அகாதமி விருது என்னும் மயிலிறகு தேடி வந்தது.
தமிழக அரசின் குறள் பீடம் விருது உட்பட பல விருதுகள் அவரது தமிழ்ப் பணிகளுக்கு நியாயம் சேர்த்தன.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தமிழ்த்துறை பேராசியர், ஓய்வுப் பேராசிரியர் எனப் பல நிலைகளில், மாணாக்கர்களின் அறிவுச் சுடருக்குத் தூண்டுகோலாகத் திகழ்ந்தார் அ.ச.ஞா.
தமது இறுதி மூச்சுவரை, தாம் வளர்ந்த மரபின் நீட்சியாக சைவத்திலும், தமிழிலும் ஆய்வுகள் செய்து, பல கட்டுரைகளை அ.ச.ஞா எழுதினார்.
கம்பராமாயணத்துக்கு உரை எழுதிய ஆசிரியர் குழுவில் இருந்த அ.ச.ஞாவின், கம்பராமாயண உரைகள், இன்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன.
சாகாத் தமிழின் சகாப்தமாக வாழ்ந்து, புகழாய் நிறைந்த அ.ச.ஞானசம்பந்தத்தின் எழுத்துகள், தமிழ் மொழிக்குக் கிடைத்த அருங்கொடைகள்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி.