அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு வாழும் தமிழர்கள் பூங்கொத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற முதல்வர், பின்னர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் அமெரிக்கத் தொழில்முனைவோர், அமெரிக்க வாழ் தமிழ் தொழில்முனைவோரை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார். அப்போது 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இதையடுத்து சான்பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
லாஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புறநகர்ப் பகுதியான அனஹீம் என்னுமிடத்தில் உள்ள கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் நிலையத்துக்குச் சென்றார். நீரை மறுசுழற்சி செய்யும் ஆலையைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் இந்த ஆலைக்குக் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கழிவறைப் பயன்பாட்டுக்கும் வேளாண்மைக்கும் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவுநீர் மறுசுழற்சி முறையைத் தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தப் பயணத்தின்போது அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.