இளம் வயதில் நீச்சல் போட்டியில் சாதனைப் படைக்கும் தேனி சிறுவன்

தேனியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இளம் வயதிலேயே நீச்சல் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறைந்த நேரத்தில் பாக் ஜலசந்திக் கடலை நீந்தி சாதனை படைத்தது உள்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளான் அந்த  சிறுவன்.

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் தாரணி அவர்களின் மகன் ஜெய் ஜஸ்வந்த். சிறு வயதிலேயே இவருக்கு நீச்சலில் தீவிர ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்த இவரின் தந்தை ஆறு வயதில் தேனியில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். நீச்சலில் கைதேர்ந்த இந்த சிறுவன் எட்டு வயதில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தை 50 நிமிடங்களில் இடைவிடாது நீந்தி தனது முதல் உலக சாதனையை படைத்தார். இந்த ஊக்கமே அவரது அனைத்து உலக சாதனைகளுக்கும் வித்திட்டது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் வாட்டர் ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்காக தங்கம் வென்று உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்
 
 இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய 10வது வயதில் தலைமன்னார் முதல் இந்தியாவின் அரிச்சல் முனை வரை உள்ள பாக் ஜலசந்திக் கடலில் 28 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

10மணி 30 நிமிட நேரத்தில் பாக் ஜல சந்தியைக் கடந்து குற்றாலீஸ்வரன் சாதனையை முறியடித்த சிறுவன் உலகிலேயே மிகக் குறைந்த வயதில் குறைந்த நேரத்தில் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தவர் என்ற பெருமையும் அடைந்துள்ளார். சாதனை சிறுவனை டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள ஜஸ்வந்த் உலகின் அனைத்து நீர் மார்க்கங்களையும் கடப்பதும் தன் லட்சியம் எனவும் 18 வயதிற்குள் அனைத்து கடல்நீர் மார்க்கங்களையும் நீந்திக் கடப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பயிற்சியாளர் சிறந்த முறையில் பயிற்சியளித்து வருவதாகவும், மகனின் அனைத்து முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் பெற்று வரும் இந்த சிறுவன் எதிர்காலத்தில் நீச்சலில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை
 

Exit mobile version