ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பெண்ணின் சாதனை

பீகார் மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஸ்வீட்டி குமாரி என்ற விளையாட்டு வீராங்கனை, தற்போது தனது 19ஆவது வயதில் சர்வதேச விளையாட்டு உலகமே தன்னை திரும்பிப் பார்க்கும்படி சாதித்துள்ளார், அப்படி ஸ்வீட்டி குமாரி சாதித்தது என்ன, சந்தித்தது என்ன, கடந்து வந்த பாதையை விவரிக்கின்றது இந்தத் செய்தித்தொகுப்பு …

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்வீட்டி குமாரி. இவரது அப்பா தினக் கூலியாகவும், அம்மா அங்கன்வாடிப் பணியாளராகவும் பணியாற்றி குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீட்டி குமாரி பள்ளி மாணவியாக இருந்தபோதே தனது அண்ணனைப் பின்பற்றி தானும் ஓட்டப் பந்தயத்திற்குள் நுழைந்துள்ளார். தொடர்ந்து பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் சாதித்து வந்தார்.

தனது 14ஆவது வயதில், ஒரு ஓட்டப் பந்தயப்போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 11.58 வினாடிகளில் ஸ்வீட்டி மின்னலாகக் கடந்த போது, அவரைத் தற்செயலாகப் பார்த்த அமெரிக்க ரக்பி பயிற்சியாளர் மைக் பிரைடே என்பவர் ஸ்வீட்டிக்கு ரக்பி விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.
 
இயல்பாகவே ஸ்வீட்டிக்கு இருந்த வேகமும், அவரது கடுமையான பயிற்சிகளும் விரைவில் ஸ்வீட்டியை சிறந்த ரக்பி வீராங்கணையாக மாற்றின. தனது 14ஆவது வயதில் தனது சொந்த ரக்பி அணியை தானே கட்டமைத்த ஸ்வீட்டி, பீகாரின் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் அந்த அணியோடு பங்கேற்றார். தனது 17ஆவது வயதில் இந்தியாவின் 17 வயதுக்கு உட்பட்டோர் ரக்பி அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. 18ஆவது வயதில் இந்தியாவின் மூத்தோர் ரக்பி அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. ஸ்கோர் எந்திரம் – என்று இந்திய ரக்பி அணியால் அழைக்கப்படும் ஸ்வீட்டி, ’ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தின் மிக வேகமான ரக்பி வீராங்கனை’ என்று ஆசிய ரக்பி சங்கத்தால் புகழப்பட்டுள்ளார். அத்தனைக்கும் மேலாக, இவரை உலகப் புகழ்பெற்ற விளையாட்டு இணைய தளமான “ஸ்க்ரம் குயின்ஸ் (Scrumqueens)” இந்த ஆண்டின் மிகச் சிறந்த சர்வதேச விளையாட்டு இளம் வீராங்கனை என அறிவித்து உள்ளது.
 
தனது 14ஆவது வயதுவரை என்னவென்றே தெரியாமல் இருந்த ஒரு விளையாட்டில், தனது 19ஆவது வயதில் உலகத்தர வீராங்கனையாகி உள்ள ஸ்வீட்டியை சர்வதேச விளையாட்டு உலகம் தற்போது திரும்பிப் பார்க்கின்றது.

ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் போது, விளையாட்டு வீரருக்கான காலணிகள் இல்லாததால், கடனாக வாங்கிய காலணிகளை அணிந்துக்கொண்டே  வெற்றிக்கனியை பறித்த ஸ்வீட்டி குமாரி போன்று  இந்தியாவெங்கும் பல்வேறு திறமைசாலிகள் பட்டை தீட்டப்படாத வைரங்களாக மறைந்து கிடக்கின்றனர் – என்பதுதான்  சாதனைகள் நமக்குச் சொல்லும் செய்தியாக உள்ளது.

Exit mobile version