ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 28 புள்ளி 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், கொரோனா பாதிப்பால் தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் அளவு மற்றும் பால் விலையை குறைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கலில் தவித்த பால் உற்பத்தியாளர்களுக்கு உதவிடும் வகையில் 100 புதிய பால் கூட்டுறவுச் சங்கங்கள், 378 பால் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு புதிதாக 12 ஆயிரத்து 800 உறுப்பினர்களை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புக்கு ஆவின் கொண்டுவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக ஆவின் கொள்முதல் அதிகரித்து வந்த நிலையில், மே 7 ஆம் தேதி 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்திலும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்குவதுடன் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆவின் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பால் பண்ணைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஷிப்ட் முடிந்த பின்னரும் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் தடையின்றி தொடர்ந்து கிடைக்குமெனவும், பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டுமெனவும் ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.