அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பழமையான பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைமாதம் நிகழும் அற்புத நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தா. பழுரை அடுத்த காரைக்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதிவரை லிங்கத்தின்மீது சூரியஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் துவக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.
அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின்போது ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின்மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த அரிய நிகழ்வை காண பக்தர்கள் ஆர்வமுடன் கோயிலுக்கு வந்தனர். சூரிய உதயத்திற்கு முன்னதாக கோயிலுக்கு வந்து சூரிய உதயத்தோடு லிங்க வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பானது என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.