கரூர் மாவட்டத்தில் விவசாயியை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிச்சைமுத்து என்பவர் தமது இருசக்கர வாகனத்தில் இடையப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலவிடுதி காவல் நிலையத்தின் தலைமை காவலரான மணிகண்டன், பிச்சைமுத்துவை வழிமறித்து அப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மதுவிற்பனை குறித்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்கு தமக்கு எதுவும் தெரியாது என பதிலளித்த பிச்சைமுத்துவை தலைமைக் காவலர் மணிகண்டன் கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்த காவலர் பொன்ராஜ், விவசாயி பிச்சைமுத்துவிடம் சமாதானம் பேசியதாக தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமைக் காவலர் மணிகண்டன் மற்றும் காவலர் பொன்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.