சென்னையில் கொடுக்கல் வாங்கல் தகராறில், இருவர் விஷம் குடித்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட இவர் செளகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் திருவல்லிக்கேணியை சேர்ந்த சித்திக் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சில ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மனோஜை தேடி ஃபைனான்ஸ் கம்பெனிக்கு வந்த சித்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒருவரை ஒருவர் மிரட்டும் தொனியில் விஷம் குடித்து இருவரும் மயங்கினர். பின்னர் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு வந்தவர்கள் பார்த்தபோது மனோஜ் உயிரிழந்திருப்பதும், சித்திக் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனோஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், சித்திக்கை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.