ஆந்திராவில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் ரூபாயை சுருட்டிய டிக்டாக் புகழ் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நவரசத்தையும் முகத்தில் தேக்கி நடனம் பழகும் இந்த 50 வயது ஆடல் அரசியின் பெயர் காயத்திரி. ஆந்திரா வாழ் ரெளடி பேபி. அவரது அருகில் நின்று கொண்டு சேலையில் வீடு கட்டி கொண்டிருக்கும் இந்த சீனியர் சிட்டிசனின் பெயர் ஸ்ரீதர். ஓய்வு வயதை தாண்டிய தனியார் கல்லூரி பேராசியர்.
கோதவாரி மாவட்டம் கோகரம் பகுதியை சேர்ந்த இந்த மேட் பார் ஈச் அதர் கப்பிள், டிக்டாக் காலம் தொட்டே வீடியோ வெளியிட்டு ஆந்திராவில் பல ஆர்மிகளை உருவாக்கி வைத்துள்ளனர். லிட்டில் பிரின்ஸஸ் போல கவுன் சகிதம் காயத்திரி ஆடும் ஆட்டத்திற்கு மயங்காத மசாலா தேசத்து மைந்தர்கள் குறைவு.
இந்நிலையில் இந்த தம்பதிகள் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது. டிக்டாக் மூலம் அறிமுகமான கவுரி சங்கர் என்பவர், தனது மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தரும்படி டிக்டாக் தம்பதிகளை அணுகிய நிலையில் தங்களது கண் அசைவிற்கு ஹார்டுவேர்டு பல்கலைக்கழகமே கட்டுப்படும் என்று ரீதியில் கம்பி கட்டும் கதைகளை அள்ளிவிட்டு பல லட்ச ரூபாயை கறந்துள்ளது இந்த 420 ஜோடி.
கவுரி சங்கர் மட்டுமல்லாது, டாக்டர் ஆசை காட்டி இந்த டிக்டாக் திரவியவங்கள் மஞ்சள் குளித்தவர்கள் பட்டியல் வெகு நீளம். டிக்டாக்கில் இவர்களின் ஆட்டத்தை பார்த்து இன்பாக்ஸிர்க்கு வரும் ஆடுகளை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தை கறப்பதை இவர்கள் குலத்தொழிலாக செய்துள்ளனர். இப்படியாக இதுவரை இவர்கள் கறந்த தொகை மட்டும் 50 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
சீட்டும் பெற்றுத்தரமால், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தம்பதிகள் ஆட்டம் காட்ட பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கைது செய்யப்பட்ட அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செயலிகளில் உலவும் வீடியோக்களை பார்த்து, சிரிப்பதோடு கடக்காமல் அவர்களை நம்பி பணம் பரிவர்தனை நடத்தினால் பட்டை நாமம் உறுதி என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.