கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நித்திரவிளை அருகே வட்டபழஞ்சி பகுதியை சேர்ந்த மேரி கமலம் என்ற மூதாட்டி காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக பல்வேறு சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை தனது கடையைத் திறப்பதற்காக வீட்டிலிருந்து சென்றபோது, சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனமழை காரணமாக தேங்கிய மழை நீரை, அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததே, மூதாட்டி உயிரிழந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

Exit mobile version