சேலத்தில் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்க்கு, விதவைப் பெண்ணிற்கான மாத உதவி தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் – பிரேமா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செல்வம், தனது நண்பருடன் சேர்ந்து செங்கல் சூளை ஒன்றை தனியாக தொடங்குவதற்காக சுமார் 4 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். பின்னர், தொழிலில் நஷ்டமடைந்த செல்வம் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பிரேமா தனது மூன்று குழந்தைகளுடன் செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலைக்கு சென்றார். கடன் தொல்லையால் குழந்தைகளின் பசியை போக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட பிரேமா, தன் தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர், சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டார். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழக அரசு சார்பில் பிரேமாவிற்கு விதவைப் பெண் மாத உதவி தொகையான ஆயிரம் ரூபாயுடன், நியாய விலை குடும்ப அட்டை வழங்கவும் ஆணை பிறப்பித்தார். இந்த நிலையில், பிரேமாவிற்கு உதவிக் கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கும் பல்வேறு தரப்பினரும், பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.