மாசற்ற மாநிலத்தை உருவாக்கும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குப்பைகளை அள்ள, நவீன பேட்டரி வாகனங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன..
வாகனங்களில் இருந்து வரக்கூடிய புகை, வீட்டில் தேங்கி நிற்க்கும் சாக்கடை கழிவுகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை என பல விதங்களில் நாம் அன்றாடம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகிறோம்.
அந்த வகையில் வீட்டில் சேமிக்கப்படும் குப்பையானது சரியாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே தேங்குவதால் டெங்கு, டைபாய்டு போன்ற நோய்க்கு பொதுமக்கள் உள்ளாகின்றனர்.இதனை அடிப்படையாகக் கொண்டு மாசற்ற உலகத்தை உருவாக்குவதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நவீன மின்சார குப்பை அள்ளும் வாகனம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் சென்னை மாநகராட்சி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ், 14 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனங்களை குப்பை அகற்றும் பயன்ப்பாட்டிற்க்காக சென்னை மாநகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிப் பகுதியில் 19,605 தூய்மைப் பணியாளார்கள் மூலம் , 4,027 மூன்று சக்கர மிதிவண்டிகள், 206 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5,000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பேட்டரியால் இயங்க கூடிய 411 மூன்று சக்கர வாகனங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன.
குப்பை சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் சார்பில், பேட்டரியால் இயங்கும் 14 மூன்று சக்கர வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடார்ச்சியாக, கடந்த செவ்வாய்க் கிழமை அப்பல்லோ மருத்துவமனையின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2 வாகனங்கள் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனத்தின் பேட்டரியினை 2 மணி நேரம் சார்ச் செய்தால் போதும், 50 கீலோ மீட்டர் தூரம் வரை உபயோகிக்கலாம்.
இந்த வாகனம் மூலம் நாளொன்றுக்கு 500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது, இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையானது தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் இடத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு வீடுகளில் கூட சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த பேட்டரி வாகனத்தினை அதிகப்பட்சமாக 20கீ.மீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும். சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு புகையை இம்மியும் வெளியிடாத அளவிற்கு இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த வாகனமானது விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.