இந்தியாவின் சக்தி வாய்ந்த அமைச்சர்களுள் ஒருவர் அருண் ஜெட்லி. 1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் புகழ்பெற்ற வழக்கறிஞரான மகராஜ் கிஷன் ஜெட்லிக்கும், ரத்தன் பிரபாவுக்கும் பிறந்த அருண் ஜெட்லி, தன் இரு சகோதரிகளுடன் புதுடெல்லியில் வளர்ந்து வந்தார். 1969ஆம் ஆண்டு பள்ளிக்கல்வியை முடித்த அருண் ஜெட்லி 1973ஆம் ஆண்டு ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1977ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்டபோது, 19 மாதங்கள் சிறையில் இருந்த அருண்ஜெட்லி, வெளிவந்ததும் 1980ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவரது நிர்வாகத் திறமை, அவரை பாஜகவின் டெல்லிபிரிவு செயலராக உயர்த்தியது. 1982ஆம் ஆண்டு, அப்போதைய ஜம்முகாஷ்மீர் மாநில முன்னாள் நிதியமைச்சர் கிரிதரி லால் தொக்ராவின் மகளான சங்கீதாவை மணந்து கொண்டார். மேலும், 1991ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய நிர்வாகியாகவும் 1999ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் தேர்தலில் வென்று, வாஜ்பாயி தலைமையில் அமைச்சரவை அமைந்தபோது, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுவே இவர் வகித்த முதல் மத்திய அமைச்சர் பதவி ஆகும்.
முதன்முதலாக, உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டிருந்த பங்கு முதலீடுகளைப் பகிர்ந்தளிக்கும் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் , தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000ஆவது ஆண்டு பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தனது சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் ஆகிய மூன்று துறைகளையும் நிர்வகிக்கும் அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்கான முதல் முயற்சிகள் பலவற்றில் இவரது திறன் பெருமளவில் இவருக்குப் புகழைச் சேர்த்தது. நாட்டின் கப்பல் போக்குவரத்துத்துறை புதிதாக உருவாக்கப்பட்டபோது, அதன் முதலாவது அமைச்சராகப் பொறுப்பேற்றவர் அருண் ஜெட்லி.
அரசியல் வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் சமரசங்கள் இன்றி வாழ்ந்தவர் அருண் ஜெட்லி. 2009ஆம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பாஜகவின் கொள்கைகளில் ஒன்றான ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கைக்குக் கட்டுப்பட்டு, தான் வகித்துவந்த பாஜக பொதுச்செயலாளர் பதவியைத் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார்.
தன் பொதுவாழ்வில், நிதித்துறை, பாதுகாப்புத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை எனப் பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றியதன் மூலம், மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர்.
கடைசியாக 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால் உடல்நலக்கோளாறு காரணமாக, அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி இன்று நம்மை விட்டு மறைந்திருப்பது இந்திய அரசியலுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.