திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன்கள் பறிகொடுத்தவரிடமே பணம் கேட்டு மிரட்டிய பலே கில்லாடி கைது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் செல்போன் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட் கோட்டத்தில் ஒலக்கூர், பிரம்மதேசம்.மயிலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் வீடுபுகுந்து செல்போன்கள் மற்றும் பணம் திருடப்பட்டு வந்தது. இதுதொடர்பாக செல்போன்கள் பறிகொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அப்பொழுது செல்போன் பறிகொடுத்த நபர் ஒருவர் திருடப்பட்ட செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அந்த நபர் பேரம் பேசிய ஆடியோ பதிவுசெய்யப்பட்டு வெளியானது. மேலும் மற்றொருவர் பேசி பதிவிடப்பட்ட ஆடியோவில் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் ஆடியோ வெளியாகி இருந்தது. இந்த 2 ஆடியோகளும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நொளம்பூர் பகுதியில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை செய்ததில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடுவதை அய்யனார் ஒப்புக்கொண்டார். மேலும் இதனைத் தொடர்ந்து திண்டிவனம் அடுத்த சிருவாடியில் அரசுப் பொறியாளர் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு மூன்று செல்போன்களை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டார். திண்டிவனம் அடுத்த அண்ப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி ஆசிரியை வீட்டில் இருந்த செல்போன்களும் திருடி விட்டு பின்னர் அவரிடம் பேரம் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது இதனை திருடியைதயும் அய்யனார் ஒப்புக்கொண்டார். விசாரணையில் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனார்(33)என்பது தெரியவந்தது.
மேலும் பல பகுதிகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய செல்போன்களை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் சுதாகர் (28) என்பவர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 32 விலை உயர்ந்த செல்போன்கள் ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்த இருவரையும் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல்
ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறை அடைத்தனர்.