வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.