அமிர்தசரஸில் வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதல்

அமிர்தசரஸில் வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்தில், குற்றவாளிகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் காவல்துறை அறிவித்துள்ளது.

அமிர்தசரஸில் உள்ள அட்லிவால் கிராமத்தில் பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆசிரமத்தின் முன் பகுதியில் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் கொடுப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version